காக்கா பிடித்தார் விஜய்: எஸ்.வி.சேகர் கமெண்ட்

ராகுல் அழைத்ததால் தான் விஜய் போனார் என்பது சுத்த பொய் என்று நடிகரும் எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.


கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

’’நடிகர் விஜய் என்ன சொல்லியிருக்கிறார் என்பதே புரியவில்லை. யாருமே தன் மீது கோபப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர் பேசியிருப்பதாகத் தெரிகிறது. ராகுல் அழைத்ததால் தான் அவர் போனார் என்பது நம்பும்படியாக இல்லை. அது ஒரு சுத்த பொய்.

நான் அழகிரியை சந்தித்து பேசுகிறேன் என்றால் எனக்கு காரியம் ஆக வேண்டும் என்பதற்காகதான். அழகிரி என்னை கூப்பிட்டு பேச போவதில்லை. அதைப்போலவே விஜய் யார் யாரையோ காக்கா பிடித்து ராகுல் காந்தியை சந்தித்திருக்கிறார்.

விஜய்யை சந்திக்க ராகுலுக்கு என்ன அவசியம் வேண்டியிருக்கிறது. விஜய் மற்றும் சந்திரசேகரும் அவர்களுடைய சுயநலத்துக்காகவே ராகுலை சந்தித்துள்ளனர்.

விஜயகாந்த், 50 வயதுக்கு மேல் தான் அரசியல் கட்சி ஆரம்பித்தார்; அதற்கு முன், கடந்த 10 ஆண்டுகளாக அவர் அரசியலை விமர்சனம் செய்து கொண்டு இருந்தார். அவர் யாரையும் போய் பார்க்கவில்லை.

அவரே நினைத்து, புதிய கட்சியை ஆரம்பித்தார்; கஷ்டப்பட்டாலும் கட்சியை நடத்துகிறார்.

விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி இன்னும் தெளிவாகப் பேசவில்லை. இப்போது, அவர் கூறியிருக்கும் விஷயங்கள், நிச்சயமாக அவருடைய சினிமா வாழ்க்கையின் எதிர்காலத்தைப் பாதிக்கும்’’என்றார்.